போலீசாரை மிரட்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 3 பேர் கைது
மாங்காடு போலீஸ் நிலையத்தில் போலீசாரை மிரட்டியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
வளசரவாக்கம் பெத்தானியா நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 52). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் இளநீரை மொத்தமாக வாங்கி சிறு கடைகளுக்கு விற்கும் தொழில் செய்து வருகிறார். மாங்காட்டை சேர்ந்த குமாரின் மனைவி திலகவதி (32). மாங்காடு பஸ் நிலையம் அருகே இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சேகர் இளநீர் விற்பனை செய்து வந்தார். அந்த வகையில் ரூ.9 ஆயிரத்தை திலகவதி பாக்கி வைத்துள்ளார்.
அதனை கேட்க நேற்றுமுன்தினம் இரவு சேகர் மாங்காட்டில் உள்ள கடைக்கு சென்று திலகவதியிடம் கேட்டார். அப்போது திலகவதியின் கணவர் குமாருக்கும், சேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சேகர் மாங்காடு போலீசில் புகார் செய்தார். குமார் போதையில் இருந்ததால் இருவரையும் நேற்று விசாரணைக்கு வருமாறு போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று இரு தரப்பினரும் மாங்காடு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது போலீஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த சேகரின் ஆதரவாளர்கள் 3 பேரும் விசாரித்து கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். மேலும் புகார் அளித்தவரிடமே விசாரிக்கலாமா? நாங்கள் யார் தெரியுமா? நாங்கள் நினைத்தால் உங்களை எல்லாம் தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவோம் என்று பேசியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த இன்ஸ்பெக் டர் கிருஷ்ணகுமார் வந்து கேட்டபோது அவரிடமும் மிரட்டும் தொனியில் பேசி உள்ளனர்.
விசாரணையில் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரவாயல் தொகுதி துணை செயலாளர் ரமேஷ் (40), வட்ட செயலாளர் பிர்லாபோஸ் (27), இளைஞர் அணி அமைப்பாளர் பழனி (32), என்பதும் 3 பேரும் சேகருக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்திற்கு வந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் அத்துமீறி போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டும் தொனியில் பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்தநிலையில் புகார் சம்பந்தமாக ஆஜரான திலகவதி, தான் தர வேண்டிய பணத்தை சேகருக்கு தருவதாக ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களிடம் போலீசார் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.