ரெயில்வே வார விழா மதுரை கோட்டத்துக்கு 3 பதக்கங்கள்

ரெயில்வே வார விழாவையொட்டி மதுரை கோட்டத்துக்கு 3 பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Update: 2018-04-19 22:00 GMT
மதுரை, 

இந்திய ரெயில்வேயின் 63-வது வாரவிழா மதுரையில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் முரளிகிருஷ்ணா தலைமை தாங்கினார். கூடுதல் கோட்ட மேலாளர் ஓ.பி.ஷா முன்னிலை வகித்தார். கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்களுக்கு விருது வழங்கினார்.

இதில் பொதுப்பிரிவு ஊழியர் முத்து விக்னேஷ், வர்த்தக பிரிவு பெரியராமு உள்ளிட்ட 179 ஊழியர்களுக்கும், மெக்கானிக்கல், வர்த்தகம், என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளுக்கு 19 விருதுகளும், 7 சிறப்பு விருதுகளும், 18 பதக்கங்களும் வழங்கப்பட்டன. தென்னக ரெயில்வே பொதுமேலாளர் விருதை மதுரை கோட்டத்தில் முதுநிலை மருத்துவ அலுவலர் டாக்டர்.சந்தோஷ், கோட்ட இயக்க மேலாளர் கணேஷ், கோட்ட ஊழியர் விவகார அலுவலர் கண்ணன், முதுநிலை என்ஜினீயர் (ரெயில்பாதை) அப்துல்ரகுமான், துணைத்தலைமை டிக்கெட் ஆய்வாளர் (பறக்கும்படை) டி.செல்வக்குமார் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

சிறந்த பணிக்காக மதுரை கோட்ட பாதுகாப்பு பிரிவு, மருத்துவப்பிரிவு, இந்தி மொழிப்பிரிவு ஆகியவற்றுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் திருச்சி கோட்டம் , பாலக்காடு கோட்டத்துக்கு அடுத்ததாக மதுரை கோட்டம் சாதனை படைத்துள்ளது. முன்னதாக, கோட்ட மேலாளர் பேசும்போது, மதுரை கோட்டத்தில் உள்ள ரெயில்நிலையங்களில் பயணிகளின் வசதிக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்காக ரெயில் நிலையங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

அனைத்து பிரிவு ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பாதுகாப்பு பிரிவு விருது கிடைக்காது. அனைவரின் ஒத்துழைப்புடன் ஒரே வருடத்தில் பயணிகளுக்கான சேவைகள் நிறைய செய்து முடிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு ரெயில்வே பாதுகாப்புப்படையினரின் சேவைகளும் பாராட்டத்தக்கது. ரெயில்களில் பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பதில் பாதுகாப்பு படை போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்றார். விழாவில் ரெயில்வே பள்ளி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

மேலும் செய்திகள்