பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: 9 சி.பி.சி.ஐ.டி. குழுக்கள் அமைப்பு
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த புகாரின் பேரில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசின் 9 குழுவினர் நேற்று விசாரணையை தொடங்கினர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த 4 மாணவிகளை செல்போன் மூலம் தவறான பாதைக்கு அழைத்த புகாரில் அக்கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மாதம் 28-ந்தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் முதலில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையின் முக்கியத்துவம் கருதி டி.ஜி.பி. ராஜேந்திரன் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
முதலில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டார். இவ்வழக்கில் பேராசிரியை மற்றும் மாணவிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் விசாரணை அதிகாரியாக தென்மண்டல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் இருவரும் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மயில், மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் ஆகியோர் நேற்று காலை விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தனர். வழக்கு விசாரணையை மேற்கொள்ள சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. பெண் துணை போலீஸ் சூப்பிரண்டு ஷாஜிதாபேகம், மதுரையில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா ஆகியோருடன் தென்மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இருந்தும் 9 சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி வழக்கு விசாரணை பற்றி கலந்தாய்வு மேற்கொண்டார்.
குழுக்கள் அமைப்பு
இந்த வழக்கில் தொடர்புடைய பல்வேறு இடங்களுக்கும் சென்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த 9 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த 9 குழுக்களிலும், 30 சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடம் பெற்றுள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டுடனான கலந்தாய்வுக்கு பின்னர் இந்த 9 குழுவினரும் விசாரணையை தொடங்கினர்.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகிகள், முதல்வர், பேராசிரியர்கள், முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் முதல்வர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் குழுவினர் தனித்தனியாக விசாரணை மேற்கொள்கிறார்கள்.
இதே போன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கும் சென்று அங்கும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் குழு விசாரணை தொடங்கியது.
விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தென் மண்டல சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்டுள்ள 9 குழுவினரின் விசாரணை நடைமுறையை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தேவைப்படும் பட்சத்தில் அவர் நேரடி விசாரணையும் மேற்கொள்வார்.
ஒரு வாரம் விருதுநகரில் தங்கி இருந்து இந்த வழக்கு விசாரணையை முடுக்கி விடுவதுடன் விசாரணையின் போக்கையும் கண்காணிப்பார். இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த விசாரணையை தொடர்வார்கள்.
நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவியை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் அவரை விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். வழக்கில் பேராசிரியை தொடர்பு கொண்ட மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ரகசிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுவில் இம்மாதிரியான பிரச்சினையில் பெற்றோர்களின் கோரிக்கை நியாயமானது தான். அதற்கு ஏற்றபடி அந்த மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்படும்.
இந்தநிலையில் காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். மற்றொரு விசாரணைக்குழுவினர் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிக்கு சென்று கணிதத்துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், நிர்மலாதேவியிடம் நன்கு பழக்கமுள்ள கல்லூரி ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி குறித்து புகார் கொடுத்த 4 மாணவிகளிடம் விரைவில் ரகசிய விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
மேலும், தேவாங்கர் கல்லூரி நிர்வாக குழு செயலாளரான ராமசாமி நேற்று காலை விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்தார். அங்கு கல்லூரி தலைவர் ஜெயசூரியா, துணைத்தலைவர் சங்கரலிங்கம் மற்றும் அலுவலர்களிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்தநிலையில் நிர்மலாதேவியை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என்று, சாத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2-ல் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று மாஜிஸ்திரேட்டு கீதா தெரிவித்தார். நிர்மலாதேவியை அப்போது நேரில் ஆஜர்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.