அடேங்கப்பா..!
உலகிலேயே மிக அரிதான நாய் வகை வியட்நாமின் புக்வாக் தீவில் வசிக்கும் ரிட்ஜ்பேக் நாய்தான்.
உலகளவில் ஆயிரத்திற்கும் குறைவான ரிட்ஜ்பேக் நாய்களே உயிர்வாழ்கின்றன.
அதனால் இந்தவகை நாய்களுக்கு ஏகபோக வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த கேத்ரின் லேன் என்பவர், வியட் நாமில் இருந்து 2 நாய்களை வாங்கிச் சென்றிருக்கிறார். அவை இன்று 6 குட்டிகளை ஈன்றுள்ளது. புதிதாக பிறந்திருக்கும் நாய்குட்டிகளை வாங்க, லண்டனில் போட்டா-போட்டி நிகழ்கிறதாம். ஒவ்வொரு நாய்க் குட்டியும் 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கின்றன. ஏற்கனவே இருவர் முன்பணம் கொடுத்துவிட்ட நிலையில், மீத மிருக்கும் நாய்களை வாங்க ஏலத்துக்கு ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள்.
‘‘நாய்களை வளர்ப்பதற்காகவே வியட் நாமில் இருந்து வாங்கி வந்தேன். ஆனால் அவை இன்று என்னை விற்பனையாளராக மாற்றியிருக்கின்றன’’ என்று சந்தோஷத்தில் குதியாட்டம் போடும் கேத்ரின், நாய்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள் கிறார்.
நாய்களை பராமரிப்பதற்காக தன்னுடைய அலுவலக வேலைகளை மூட்டைக்கட்டியவர், 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமராக்களின் மூலம் அவைகளின் தேவைகளை கவனித்துக்கொள்கிறார். அதுமட்டுமா..? தனி அறை, படுக்கை விரிப்புகள், உயர்தர உணவு... என நாய்க்குட்டிகளுக்கு ராஜ உபசரணை வழங்கி வருகிறார். அப்படி என்னங்க ரிட்ஜ்பேக் நாய்களிடம் சிறப்பு என்கிறீர்களா...? இவை புத்திசாலியானவை. கடுமையான வெயில், குளிர் என எந்த காலநிலையையும் ஏற்றுக்கொள்ளும். மேலும் ஆயிரத்திற்கும் குறைவான நாய்களே உயிர்வாழ்வதால், புதிதாக பிறக்கும் நாய்க்குட்டிகள் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.