ஆதிதிராவிடர் நலத்துறை குறித்த ஆய்வுக்கூட்டம்
பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்த 4 ஆயிரத்து 328 பேருக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு புதுடெல்லி தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கலெக்டர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆணைய துணை தலைவர் முருகன் விவாதித்தார். பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மத்திய, மாநில அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 522 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 7 ஆயிரத்து 775 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலத்தை 4 ஆயிரத்து 328 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற சட்டப்படி அவர்களுக்கு நோட்டீஸ் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்கள் அல்லாதவர்கள் பஞ்சமி நிலத்தை வைத்திருந்தால் பறிமுதல் செய்து பிற நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
தாட்கோ திட்டம், எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் முடிக்கப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள், தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகள், விடுதலை செய்யப்பட்ட வழக்குகள், சமரசம் ஏற்பட்ட வழக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பிரதமரின் ‘ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு 3 ஆயிரத்து 654 வீடுகளும், பழங்குடியினருக்கு 3 ஆயிரத்து 326 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 800-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் இயங்குகிறது. பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட வேண்டும். இங்குள்ள ஆதிதிராவிட மாணவர்கள் மருத்துவப்படிப்பு போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களுக்கு செல்லவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 62 பள்ளிகள் உள்ளன. அதில் 5 ஆயிரத்து 10 பேர் படிக்கின்றனர். தேசிய அளவில் வன்கொடுமை குறித்து பல மாநிலங்களில் இருந்து புகார்கள் வாங்கப்பெற்றுள்ளது. குஜராத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை அதிகமாக உள்ளதாக கூறுகிறார்கள். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இறப்பு வழக்குள் அதிகமாக உள்ளது. இதைபார்க்கும் போது குஜராத்தில் குறைவாக உள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.