சிவகங்கை அருகே துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து ரூ.23 லட்சம் தங்கம் கொள்ளை

சிவகங்கை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், தங்கக்கட்டிகள், வெள்ளிப்பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2018-04-18 22:00 GMT
மதகுபட்டி,

சிவகங்கையை அடுத்த கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வைரவன். இவருடைய மனைவி கண்ணத்தாள்(வயது 73). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைரவன் இறந்துவிட்டார். இதனால் கண்ணத்தாள் தனது 2-வது மகன் நாச்சியப்பனுடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனால் கீழப்பூங்குடியில் உள்ள வீடு பூட்டியே கிடந்தது. கடந்த டிசம்பர் மாதம் ஊருக்கு வந்திருந்த கண்ணத்தாள், சில நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்றிருந்தார்.

இந்தநிலையில் வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டின் பூஜை அறையில் இருந்த 36 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் பக்கத்து அறையில் இருந்த அரை கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் 10 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.23 லட்சம்.

நேற்று காலை அக்கம்பக்கத்தில் வசிப்போர் கண்ணத்தாள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் கண்ணத்தாள் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகள், தங்கக்கட்டிகள், வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் மோப்ப நாய் சிறிது தூரம் சென்று திரும்பியது.

தடயவியல் துறை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக மதகுபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்