இளையான்குடி அருகே கொத்தடிமைகளாக ஆடு மேய்த்த 2 சிறுவர்கள் மீட்பு: ‘ரூ.50 ஆயிரத்திற்காக ஒப்பந்தம் செய்த தந்தை’

இளையான்குடி அருகே விளங்குளம் கிராமத்தில் கொத்தடிமைகளாக ஆடு மேய்த்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

Update: 2018-04-18 23:00 GMT
இளையான்குடி,

இளையான்குடி அருகே விளங்குளம் கிராமத்தில் கொத்தடிமைகளாக சிறுவர்கள் 2 பேர் ஆடுகள் மேய்ப்பதாக மாவட்ட கலெக்டர் லதா மற்றும் சைல்டுலைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமையில் அலுவலர்கள் முத்து நாகராஜ், சத்தியமூர்த்தி, சைல்டுலைன் குழுவினர் மற்றும் வருவாய்த்துறையினர் விளங்குளம் கிராமத்திற்கு சென்றனர். அப்போது அங்கு கொத்தடிமைகளாக ஆடு மேய்த்து கொண்டிருந்த 2 சிறுவர்களை மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அம்மனிசத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன்கள் தங்கப்பாண்டியன்(வயது 7), ஈஸ்வரன்(5). இந்த சிறுவர்களை காளையார்கோவில் செந்தமிழ்நகரில் வசிக்கும் அங்குச்சாமி(60) மற்றும் அவரது மகன் ஆனந்தகுமார் ஆகியோர் ராஜேந்திரனிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து ஆடுகள் மேய்க்க ஒப்பந்தம் செய்து அழைத்து வந்துள்ளனர். மேலும் முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளனர்.

பின்னர் பட்டுக்கோட்டையில் இருந்து இளையான்குடிக்கு சிறுவர்களை அழைத்துவந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக அந்த சிறுவர்கள் ஆடுகள் மேய்த்து வந்துள்ளனர்.

அப்போது சிறுவர்களை கண்ட விளங்குளம் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மாவட்ட கலெக்டருக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தற்போது சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து கண்ணமங்களம் கிராம நிர்வாக அலுவலர் இளஞ்செழியன் கொடுத்த புகாரின்பேரில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் இளைஞர் நீதிச்சட்டம் ஆகிய சட்டங்கள்படி இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குச்சாமியை கைது செய்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய ஆனந்தகுமார் மற்றும் சிறுவர்களின் தந்தை ராஜேந்திரன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். 

மேலும் செய்திகள்