பரமக்குடி பகுதியில் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்

பரமக்குடி பகுதியில் அடிப்படை வசதிகளுக்காக அரசுப்பள்ளி மாணவர்கள் ஏங்கி வருகின்றனர்.

Update: 2018-04-18 22:00 GMT
பரமக்குடி,

பரமக்குடி எமனேசுவரம் ஜீவாநகர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் அந்த மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குஉள்ளாகி வருகின்றனர். மாணவர்கள் சிறிது நேரம் விளையாட நினைத்தால் கூட அங்கு விளை யாட்டு பொருட்களோ, உபகரணங்களோ இல்லை.ஒரே ஒரு சறுக்கு மட்டும் இருந்தது. அதுவும் தற்போது சேதமடைந்து விளையாடுவதற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது.

இதுதவிர இப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் கட்டப்பட்ட கழிப்பறைகளும் சேதமடைந்து கிடப்பதால் மாணவர்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர். ரூ.70,000 செலவில் கட்டப்பட்ட பெண்கள் கழிப்பறை எவ்வித பயன்பாடும் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இங்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு ஆசிரியர் விடுமுறையில் சென்றால் அவர் வரும் வரை அந்த வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியாத நிலை இருந்து வருவதாக புகார் கூறப்படுகிறது. கட்டிட வசதியும் இல்லாததால் மாணவர்கள் நடைபாதையில் தரையில் அமர்ந்து படிக்கின்றனர். எனவே தமிழக அரசும், பள்ளிக்கல்வி துறையும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த பள்ளிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்