விழுப்புரம் அருகே ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விழுப்புரம் அருகே ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே வானூர் குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அரசப்பன் மகன் அருண் (வயது 22). ரவுடியான இவர் மீது பொது சொத்துக்கு சேதம் விளை வித்தல், அடி,தடி தகராறு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்துக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக அருணை கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவருடைய செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் அருணை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும் படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து அருணை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோட்டக்குப்பம் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.