குமரி மாவட்டத்தில் ரத்தக்கசிவு நோயால் 86 பேர் பாதிப்பு

குமரி மாவட்டத்தில் ரத்தக்கசிவு நோயால் 86 பேர் பாதிக்கப்பட்டதாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சோமசேகர் கூறினார்.

Update: 2018-04-18 22:45 GMT
நாகர்கோவில்,

உலக ரத்தக்கசிவு நோய் (ஹீமோபிலியா நோய்) விழிப்புணர்வு தின கருத்தரங்கு நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியின் தேர்வுக்கூட அரங்கில் நடந்தது.

கருத்தரங்குக்கு கல்லூரி டீன் சோமசேகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ரத்தக்கசிவு நோய் பரம்பரையாக வரக்கூடிய நோயாகும். இது பெரும்பாலும் ஆண்களை பாதிக்கக்கூடியது. பெண்களை இந்த நோய் பாதிக்காவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு இந்த நோய் கடத்திவிடக்கூடியது. குமரி மாவட்டத்தில் 86 பேர் ரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயில் இரண்டு விதம் உண்டு. “பேக்டர்–8“ குறைபாடு உள்ளவர்கள் “ஹீமோபிலியா– ஏ“ என்ற நோயால் பாதிக்கப்படுவார்கள். “பேக்டர்–9“ குறைபாடு உள்ளவர்கள் “ஹீமோபிலியா– பி“ நோயால் பாதிக்கப்படுவார்கள்.

குமரி மாவட்டத்தில் “ஹீமோபிலியா– ஏ“ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகம் உள்ளனர். இதற்கு உரிய மருந்துகள் வெளிச்சந்தையில் அதிக விலை ஆகும். ஆனால் தமிழக அரசு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்தை வழங்கி வருகிறது. முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்ட 86 பேரில் 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 25 பேர் ஆவர்.

பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டுகள் வீங்கியோ, உடல் பாகங்கள் வீங்கியோ வருபவர்களுக்கு “பேக்டர்–8“ மருந்து கொடுத்து அனுப்புவார்கள். இந்தநோய் அறிகுறி தென்பட்டதுமே முன்எச்சரிக்கையாக கொடுக்கப்படவேண்டிய மருந்துகளும் இருக்கிறது. இதன் விலையும் வெளிச்சந்தைகளில் அதிகம். அரசு இலவசமாக வழங்குகிறது. எனவே இதை எல்லோருக்கும் கொடுக்க முடியாது.

 குமரி மாவட்டத்தில் 3 வயது குழந்தைகளுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுவாக இந்த நோய் குணப்படுத்தக்கூடியதுதான். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும்போது சில குழந்தைகளுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டு ஊசி குத்திய இடத்தில் புடைத்தபடி இருக்கும். இதன்மூலமே இந்த நோயின் அறிகுறியை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு டீன் சோமசேகர் கூறினார்.

முன்னதாக ரத்தக்கசிவு நோய் பிரிவு பொறுப்பாளரும், மருந்துத்துறை தலைவருமான டாக்டர் பிரின்ஸ் பஸ் வரவேற்று பேசினார். ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். முடிவில் மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் ஜான் கிறிஸ்டோபர் நன்றி கூறினார். ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரி மினிமோள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கு முடிந்ததும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரோகன் கொல்லா ரத்தக்கசிவு நோய் பற்றி விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகள்