வங்கியில் வாங்கிய ரூ.23 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் நூற்பாலைக்கு ‘சீல்’ வைப்பு

பொங்கலூர் அருகே வங்கியில் வாங்கிய ரூ.23 கோடி கடனை திருப்பி செலுத்தாததால், நூற்பாலைக்கு வங்கி அதிகாரிகள் ‘சீல்‘ வைத்து சென்றனர்.

Update: 2018-04-18 22:30 GMT
பொங்கலூர்,

திருப்பூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 50). இவருக்கு சொந்தமாக பொங்கலூர் அருகே கள்ளிப்பாளையத்தில் ‘சந்திரமவுலீஸ்வர் ஸ்பின்னிங் மில்‘ என்ற நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

நூற்பாலை விரிவாக்கத்திற்காக கடந்த 2008-ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் ரவிச்சந்திரன் ரூ.25 கோடி கடன் வாங்கியுள்ளார். பின்னர், அதற்கான தவணை தொகையை கடந்த சில வருடங்களாக அவர் முறையாக செலுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த பல மாதங்களாக அவரால் கடனுக்கான தவணை தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. வங்கி சார்பில் பல முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அவர் மீதமுள்ள ரூ.23 கோடியை திருப்பி செலுத்தவில்லை.

இதைதொடர்ந்து வங்கியின் கடன் வசூல் பிரிவின் முதன்மை மேலாளர் சசிகலா தலைமையில் வங்கி அதிகாரிகள், பல்லடம் தாசில்தார் அருணா மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீசாரை அழைத்துக்கொண்டு நேற்று நூற்பாலைக்கு வந்தனர். தாசில்தார் மற்றும் போலீசார் முன்னிலையில் நூற்பாலையின் அலுவலகத்திற்கு வங்கி அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர். அதன் பின்னர் நூற்பாலையின் உள்ளே எந்திரங்கள் உள்பட மற்ற பொருட்கள் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் வங்கி அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.

பின்னர் உள்ளே இருந்த அனைவரையும் வெளியேற்றிவிட்டு அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டு ‘சீல்‘ வைக்கப்பட்டன. முடிவில் நூற்பாலையில் பிரதான நுழைவு வாயிலையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்‘ வைத்தனர். அத்துடன் அந்த கதவில் இந்த நூற்பாலை வங்கிக்கு சொந்தமானது என்று அறிவிப்பு போஸ்டரை ஒட்டினர். 

மேலும் செய்திகள்