தேர்வு மைய வளாகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் மோதல்
தேவதானப்பட்டி அருகே தேர்வு மைய வளாகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவதானப்பட்டி,
தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வு மையமாகவும் விளங்குகிறது. இங்கு, தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்தநிலையில் கெங்குவார்பட்டியில் 10-ம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இவர்கள் 2 கோஷ்டியாக பிரிந்து அடிக்கடி மோதிக்கொண்டனர். இதனால் தேர்வு எழுதும் மையத்தில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். நேற்று 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வு, ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்தது.
தேர்வு எழுதுவதற்காக கெங்குவார்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அங்கு வந்தனர். தேர்வு மையத்தின் நுழைவு வாயில் அருகே அவர்கள் 2 கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் இருதரப்பினரையும் விலக்கி விட்டனர். இதனையடுத்து ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத உள்ளே சென்றனர். மற்றொரு தரப்பினர் தேர்வு எழுத மறுத்து வெளியே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது தேர்வு மையத்துக்கு கண்காணிப்பு பணிக்கு வந்த ஆசிரியர்கள், அந்த மாணவர்களை சமாதானப்படுத்தினர். அதன்பின்னர் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தேர்வு எழுதும் மைய வளாகத்தில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் அதே பள்ளியில் தேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இனிவருங்காலத்தில் தேர்வு மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.