விருத்தாசலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகைகள் கொள்ளை
விருத்தாசலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள கச்சிராயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 36). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு, முன்பக்க வளாகத்தில் குடும்பத்துடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார்.
உடனே வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ¼ கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜேஸ்வரி வீட்டை பூட்டி விட்டு, வளாகத்தில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ¼ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.4¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து, கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் புருனோ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் குற்றவாளிகள் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.