தனித்திறன் உடைய மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருதுகள் கலெக்டர் வழங்கினார்

தனித்திறன் உடைய மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருதுகளை கலெக்டர் கதிரவன் வழங்கினார்.

Update: 2018-04-17 22:45 GMT
கிருஷ்ணகிரி,

பள்ளி கல்வித்துறை சார்பில் 2016-2017-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தமிழ் வழியில் படித்து கல்வி செயல்பாடுகள் மற்றும் பிற தனித்திறன் உடைய மாணவ, மாணவிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவ, மாணவிகள், 12-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவ, மாணவிகள் மாவட்ட தேர்வு குழு மூலமாக தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு காமராஜர் விருதுகளை கலெக்டர் கதிரவன் வழங்கினார்.

அதன்படி 10-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகள், அதே போல 12-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்திற்கான காசோலைகள் என மொத்தம் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் கதிரவன் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட பள்ளி கல்வி ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 224 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தலா ரூ.1,650 மதிப்புள்ள சக்கர தள்ளுவண்டி, மாற்றுத்திறன் கொண்ட மாணவர் அருண் குமார் என்பவருக்கு இலவச பஸ் பாஸ், பனந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்ததையொட்டி அவரது தாய் முனியம்மாள் என்பவருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்து 650 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, உதவி ஆணையர் (ஆயம்), கீதாராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்