ஜெயிலில் செல்போன் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை நடத்திய முருகன்

வேலூர் மத்திய ஜெயிலில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியான ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம், முருகன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

Update: 2018-04-17 22:30 GMT
வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு மார்ச் மாதம் முருகன் தங்கியிருந்த அறையில் 2 செல்போன்கள், சார்ஜர் மற்றும் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிறை அதிகாரி உள்பட 7 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 9-ந் தேதி நடந்த விசாரணையின்போது, சாட்சியம் அளித்த உதவி ஜெயிலர் மற்றும் ஏட்டு ஆகிய 2 பேரிடம் வக்கீல் இல்லாமல் முருகனே குறுக்கு விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முருகன், பலத்த போலீஸ் காவலுடன் காலை 11.30 மணியளவில் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட்டு அலீசியா முன்னிலையில் வழக்கின் விசாரணை நடந்தது.

அப்போது முருகன் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான பாகாயம் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்ற பாஸ்கரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். சுமார் 1 மணி நேரம் இந்த குறுக்கு விசாரணை நடந்தது.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) மாஜிஸ்திரேட்டு அலீசியா ஒத்திவைத்தார். பின்னர் முருகன் மீண்டும் வேலூர் மத்திய ஜெயிலுக்கு பலத்த போலீஸ் காவலுடன் அழைத்து செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்