கோவில்பட்டி கோர்ட்டு வளாகத்தில் வக்கீலை காரை ஏற்றி கொல்ல முயற்சி; ஜூனியருக்கு அரிவாள் வெட்டு அச்சக உரிமையாளர் கைது
கோவில்பட்டியில் கோர்ட்டு வளாகத்தில் வக்கீலை காரை ஏற்றி கொல்ல முயன்றதுடன், அவருடைய ஜூனியர் வக்கீலை அரிவாளால் வெட்டிய அச்சக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் கோர்ட்டு வளாகத்தில் வக்கீலை காரை ஏற்றி கொல்ல முயன்றதுடன், அவருடைய ஜூனியர் வக்கீலை அரிவாளால் வெட்டிய அச்சக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 பெண்களை போலீசார் தேடிவருகின்றனர்.
2–வது திருமணம்
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (வயது 41). இவர் கோவில்பட்டியில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய அக்காள் வனிதாவுக்கும், தூத்துக்குடி காரப்பேட்டையை சேர்ந்த அச்சக உரிமையாளரான விஜயகுமாருக்கும் (52) திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில், விஜயகுமார் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியை சேர்ந்த பட்டுக்கனியை (55) 2–வதாக திருமணம் செய்தார். இதுகுறித்து வனிதா, கோவில்பட்டி 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
காரை ஏற்றி கொல்ல முயற்சி
நேற்று காலையில் வழக்கு விசாரணைக்காக விஜயகுமார், அவருடைய 2–வது மனைவி பட்டுக்கனி, விஜயகுமாரின் அக்காள் ரோகிணி (55) ஆகிய 3 பேரும் ஒரு காரில் கோவில்பட்டி கோர்ட்டு வளாகத்துக்கு வந்தனர். விஜயகுமார் காரை ஓட்டி வந்தார். அப்போது மகேந்திரகுமார் 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு நடந்து சென்றார். அப்போது விஜயகுமார் திடீரென்று தனது காரால் மகேந்திரகுமாரின் பின்புறம் வேகமாக மோதினார். இதில் தரையில் விழுந்து காயமடைந்த அவர், உருண்டு காயங்களுடன் தப்பினார்.
அப்போது காரில் இருந்த ரோகிணி, பட்டுக்கனி ஆகியோர் மகேந்திரகுமாரை அவதூறாக பேசி, அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யுமாறு விஜயகுமாரிடம் கூறினர். உடனே விஜயகுமார் அரிவாளால் மகேந்திரகுமாரின் கழுத்தில் வெட்ட முயன்றார். அப்போது அவர் விலகியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
இதற்கிடையே கோர்ட்டு வளாகத்தில் இருந்த விஜயகுமாரின் ஜூனியர் வக்கீலான கழுகுமலை காமராஜர் தெருவைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் அருண்காந்தி (31), போலீஸ் ஏட்டு வைரமுத்து ஆகிய 2 பேரும் சத்தம் போட்டவாறு ஓடி வந்து, விஜயகுமாரை பிடிக்க முயன்றனர். இதில் அருண்காந்தியின் வலது கை விரலில் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் விஜயகுமார், ரோகிணி, பட்டுக்கனி ஆகிய 3 பேரும் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
கார் மோதியதில் முதுகு, இடுப்பு பகுதியில் காயம் அடைந்த மகேந்திரகுமார் மற்றும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அருண்காந்தி ஆகிய 2 பேரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கு பாதுகாப்பு இல்லாததைக் கண்டித்தும், விஜயகுமார் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தியும், வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து, சப்– கோர்ட்டு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சக உரிமையாளர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார், விஜயகுமார், ரோகிணி, பட்டுக்கனி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்து, அவரது காரையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவான ரோகிணி, பட்டுக்கனி ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கோவில்பட்டி கோர்ட்டு வளாகத்தில் வக்கீலை காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.