ஸ்மார்ட் கார்டுதாரர்கள் ரேசன் பொருட்களை ‘விட்டு கொடுத்தல்’ திட்டம் அறிமுகம்
உணவுப்பொருள் வழங்கல் துறையில் ஸ்மார்ட் கார்டுதாரர்கள், ரேசன் பொருட்களை ‘விட்டு கொடுத்தல்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
உணவுப்பொருள் வழங்கல் துறையில் ஸ்மார்ட் கார்டுதாரர்கள், ரேசன் பொருட்களை ‘விட்டு கொடுத்தல்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
ரேசன் பொருட்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 4 லட்சத்து 71 ஆயிரத்து 857 ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ஸ்மார்ட் கார்டு அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரேசனில் அரிசி இலவசமாகவும், சீனி, பருப்பு, பாமாயில், கோதுமை, மண்எண்ணெய் ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் கார்டு வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் அரிசி, பருப்பு, சீனி, பாமாயில் போன்ற பொருட்களை ரேசன் கடைகளுக்கு சென்று வாங்குவது இல்லை. இவ்வாறு வாங்காத பொருட்களை போலிப் பட்டியல் மூலம் சில ஊழியர்கள் விற்பனை செய்ய முயல்வதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, உணவுப்பொருள் வழங்கல் துறை ‘விட்டுக் கொடுத்தல்’ என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
பொருட்களை விட்டு கொடுப்பது எப்படி?
இந்த திட்டத்தில் ஸ்மார்ட் கார்டு அட்டைதாரர் அரிசி, சீனி, பருப்பு, பாமாயில், கோதுமை ஆகிய உணவுப் பொருட்கள் தங்களுக்கு தேவை இல்லை எனக் கருதினாலோ, அல்லது சில மாதங்களுக்கு மட்டும் தேவை இல்லை என்றாலோ அல்லது சில பொருட்கள் தேவையில்லை எனக் கருதினாலும் இந்த திட்டத்தின் மூலம் பொருட்களை விட்டுக் கொடுக்கலாம்.
விட்டு கொடுக்கும் இந்த திட்டத்தால், ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படாது. மேலும் போலிப் பட்டியல் மூலம் ரேசன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும். இது தவிர எந்த பொருளும் தேவை இல்லை எனில், இந்த திட்டத்தின் மூலம் எப்பொருளும் வேண்டாதோர் அட்டையாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
இது தொடர்பான தகவல்களை www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் அல்லது tnepds என்ற செல்போன் செயலி மூலமாகவும் அல்லது 94450–00370 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம், என கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.