சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை, 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விற்பனைக்காக இருந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-04-16 22:45 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த புறநகரில் கண்ணகிநகர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து கஞ்சா விற்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கஞ்சா விற்பவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் கண்ணகி நகர் போலீசார் காரப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்றதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று மாணவர்களுக்கு கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த காரப்பாக்கத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 26), ரவீந்திரன் (22), சோழிங்கநல்லூரை சேர்ந்த வினாயகமூர்த்தி (22) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 3 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கைலாசபுரம் பகுதிகளில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தாம்பரம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த வசந்தா (72), அவரது பேத்தி சாலி (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்