காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி பி.ஆர்.பாண்டியன் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வேதாரண்யத்தில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Update: 2018-04-16 23:00 GMT
திருவாரூர்,

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் புண்ணியமூர்த்தி, மாநில பொருளாளர் ஸ்ரீதரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் சுப்பையன், மாநில இணைச்செயலாளர் வரத ராஜன், ஒருங்கிணைப்பாளர் தமிழார்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ், தேர்தல் அறிக்கையில் கர்நாடகாவிற்கு சாதகமாக காவிரி நீர் பிரச்சினையை அனுகுவோம் என்ற உத்தரவாதம் அளித்துள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தேசிய செயலாளர் முரளிதரராவ் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக அறிக்கை வெளியிடுமானால் அதனை தடை செய்ய வேண்டும். அந்த தேர்தல் அறிக்கையை தடை செய்திட முழு முயற்சியை எடுப்போம், போராட்டமும் நடத்துவோம். தேவையென்றால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம். காவிரி நீர் பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடிட வேண்டும் என விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அனைத்து கட்சி தலைவர் களுடன் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்துவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இறுதி கட்ட போராட்டமாக வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக தூணில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி வருகிற 25-ந் தேதி(புதன் கிழமை) தொடங்குகிறது.

100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் பேரணியாக புறபட்டு திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் வழியாக சென்னையை அடைகின்றோம். பின்னர் அங்கிருந்து புறபட்டு திருவாரூர் வந்து திருவாரூரில் பேரணியை நிறைவு செய்கிறோம். இந்த பேரணி 5 நாட்கள் நடக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பிரசாரம் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்