நாளைய உலகை நோக்கி நானோ அறிவியல்...!
அனைத்து துறைகளிலும் நானோ தொழில்நுட்பம் புதுமையை விளைவித்து வருகிறது.
அறிவியல் துறையின் அடுத்த பரிணாமம் நானோ தொழில்நுட்பம். இயற்பியல், வேதியியல், ஒளியியல் மற்றும் காந்தவியல், மருத்துவ இயல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நானோ தொழில்நுட்பம் புதுமையை விளைவித்து வருகிறது. ஒவ்வொரு துறையிலும் நம்ப முடியாத வளர்ச்சிக்கும், புதுமைக்கும் வழிவகுத்துள்ளது நானோ தொழில்நுட்பம். நாளைய உலகம் நானோ விஞ்ஞானத்தின் கையில் என்றால் மிகையில்லை. வாய்ப்புமிக்க நானோ அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளைப் பற்றி சிறிது காண்போம்...
நானோ தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் வியத்தகு சாதனைகள் பலவற்றை அறிமுகம் செய்து வருகிறது. நானோ ரோபோக்கள் உடலுக்குள் ஊடுருவி சிகிச்சை அளிக்கத் தொடங்கி உள்ளன. மருந்துகள் நேரடியாக பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை சென்றடையவும், பாதிப்புடைய பகுதிகளை துல்லியமாக கண்காணித்து சிகிச்சை அளிக்கவும் மருத்துவ உலகம் நானோ பயன்பாட்டை கையிலெடுக்கத் தொடங்கி உள்ளது. நவீன நானோ மருத்துவ உத்திகளின் பயனாக மூளைக்கட்டி, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை முற்றிலும் குணப்படுத்தும் சாத்தியக்கூறுகள் உருவாகி வருகிறது.
மருத்துவத் துறை மட்டுமல்லாது அறிவியலின் அனைத்து துறைகளிலும் நானோ ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. வானூர்திகளின் பாகங்களை எளிதில் வடிவமைக்க நானோ நுட்பம் கைகொடுக்கிறது. எரிபொருள் சிக்கனத்தை ஏற்படுத்தும் நானோ வாகனங்களால் ஆட்டோமொபைல் துறையும் வளர்ச்சி காண்கிறது.
நவீன வகை ஆயுதங்கள் மற்றும் ஆதிக ஆயுள் கொண்ட செயற்கை கோள் வடிவமைப்பில்கூட நானோ தொழில்நுட்பம் தனது பங்களிப்பை செய்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டை முற்றிலும் குறைத்து பால்வீதியெங்கும் வலம் வரப்போகின்றன நானோ விண்கலங்கள். இப்படி மின்னணுவியல், எந்திரவியல், உயிரித் தொழில்நுட்பம் என அனைத்து அறிவியல் துறைகளிலும் நானோ தொழில்நுட்ப பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. எதிர்கால முன்னேற்றத்தில் நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முதன்மை இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், சந்தை வளர்ச்சியும் இருக்கும் என்றும் நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
நமது உலகமே நானோ மயமாகி மாறி வருகிறது எனும் அளவுக்கு நானோ மெட்டீரியல்ஸ், நானோ மருத்துவம், நானோ உயிரி தொழில்நுட்பம், நானோ லித்தோகிராபி, நானோ எலக்ட்ரானிக்ஸ், நானோ மேக்னடிக்ஸ், நானோ ரோபாட்ஸ், நானோ பயோ உபகரணங்கள் என்று விரிந்துகொண்டே செல்கிறது நானோ துறை.
உலக நாடுகள் பலவற்றிலும் நானோ தொழில்நுட்பத்தை பற்றிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக தொகை செலவிடப்படுகிறது. இந்தியாவிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் நானோ ஆராய்ச்சி திட்டங்களை நிதி ஒதுக்கி செயல் படுத்தி வருகின்றன.
அணு அறிவியல் மற்றும் மரபணு துறையிலும் நானோ தொழில்நுட்பம் கூடுதல் முக்கியத்துவத்துடன் செயல்படுகிறது. போதை - மருந்து கடத்தல் தடுப்பு பிரிவில் நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தி குற்றவாளிகளை எளிதில் கண்டறியலாம்.
நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப அத்துறையில் சிறப்புமிகு பட்டப்படிப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த துறையில் பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வோருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. நல்ல வருவாயும், அந்தஸ்தும் உறுதி.
இந்தியாவில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் உள்பட ஏராளமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நானோ படிப்புகள் உள்ளன. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல தனியார் கல்வி நிறுவனங்களில் இளநிலை தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன. இவற்றில் சில கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பும் படிக்க முடியும்.
ஒவ்வொரு கல்லூரியிலும் இருக்கும் நானோ படிப்பின் உட்பிரிவுகளையும், அவற்றின் எதிர்கால வாய்ப்புகளையும் நன்கு அறிந்து கொண்டு படிப்பை தேர்ந்தெடுக்கலாம்.
நாட்டின் அனைத்து துறைகளிலும் நானோ தொழில்நுட்ப பயன்பாடு உள்ளது. எனவே எல்லா துறைகளிலும் நானோ அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருந்து தொழிற்கூடங்கள், உபகரண தயாரிப்பு நிறுவனங்கள், வாகன உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் வாய்ப்பை பெறலாம்.