கொடைக்கானலில் பலத்த மழை: வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
கொடைக்கானலில் நேற்று முன் தினம் பலத்த மழை பெய்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை நகரின் பல்வேறு இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இதில் போட் கிளப்பில் 28 மி.மீட்டர் பதிவானது. மழையால் நகரை அடுத்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி உட்பட பல நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் கொட்டியது. நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும், நட்சத்திர ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்தது.
இதற்கிடையில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மூஞ்சிக்கல் பகுதியில் இருந்து அப்சர்வேட்டரி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போதுமான போலீசார் இல்லாததால் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் போக்குவரத்தினை சீரமைத்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.