தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மேலும் 2 இடங்களில் போராட்டம் பனிமயமாதா ஆலய வளாகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மேலும் 2 இடங்களில் பொதுமக்கள் நேற்று போராட்டம் தொடங்கி உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மேலும் 2 இடங்களில் பொதுமக்கள் நேற்று போராட்டம் தொடங்கி உள்ளனர். பனிமயமாதா ஆலய வளாகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், சங்கரப்பேரி, மீளவிட்டான், மடத்தூர், முருகேசன்நகர், 3-வது மைல், சில்வர்புரம், தபால் தந்தி காலனி, மாதவன் நகர், சிலோன் காலனி, பாத்திமாநகர், தேவர்நகர் ஆகிய 14 இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகே நேற்று காலை மக்கள் திரண்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலய வளாகத்தில் கருப்பு கொடியை ஏற்றினர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் தூத்துக்குடி நகர்ப்பகுதியில் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று தூத்துக்குடி முத்தம்மாள் காலனி மக்கள் அங்கு உள்ள சமுதாய நலக்கூடம் அருகே நேற்று முதல் போராட்டத்தை தொடங்கினர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் அதிகரித்து இருப்பதால், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நேற்று முன்தினம் பீச் ரோட்டில் போராட்டத்துக்காக பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்து பந்தலை அப்புறப்படுத்தினர்.
16 இடங்கள்
இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் 16 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மேலும் நேற்று தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி நடக்க இருப்பதாக வாட்ஸ்-அப்பில் தகவல்கள் பரவின. இதனால் நேற்று காலையில் சுமார் 15 மோட்டார் சைக்கிள்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திரண்டனர். அப்போது தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர். இதனால் பலர் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதே நேரத்தில் திரண்டு இருந்தவர்களில் சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
113 பேர் கைது
இதற்கிடையே நேற்று மாலையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட வாகனங்களில் சென்றனர். அப்போது ஆலை இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையிலான போலீசார் முற்றுகையிட வந்தவர்களை வழிமறித்தனர். உடனே காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் மறியல் நடத்திய 113 பேரை கைது செய்தனர்.
கடையடைப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும், கயத்தாறு பகுதிக்குள் பஸ் வராமல் செல்வதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும் கயத்தாறு பகுதியில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது. கயத்தாறு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கடை அடைப்பு போராட்டத்தில் மொத்தம் 424 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.