பிரதமர் உருவபொம்மையை எரித்து முக்குலத்துப்புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தஞ்சையில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து முக்குலத்துப்புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது காரில் தீப்பற்றியதால் பரபரப்பு நிலவியது.

Update: 2018-04-15 23:00 GMT
தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முக்குலத்துப்புலிகள் அமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவன தலைவர் ஆறு.சரவணன் தலைமை தாங்கினார்.

திருவாரூர் மாவட்ட செயலாளர் சுரேஷ், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா வரவேற்றார். இதில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகாராஜா உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கார் ஒன்று திடீரென வந்தது. அந்த காரில் பிரதமர் மோடியின் உருவபொம்மை இருந்தது. அந்த உருவபொம்மையை கார் சீட்டில் வைத்தே பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு, காரில் இருந்து தூக்கி வெளியே வீசினர். அப்போது கார் கதவில் பெட்ரோல் கொட்டியதால் கதவிலும் தீப்பற்றி எரிந்தது. எரியும் தீயுடன் கார் சிறிதுதூரம் சென்றது. அந்த தீயை காரில் வந்தவர்களே அணைத்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் விரைந்து வந்து உருவபொம்மையின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். முடிவில் நாகை மாவட்ட செயலாளர் லெனின் நன்றி கூறினார். உருவபொம்மையை எரித்ததாக யாரையும் போலீசார் கைது செய்ய முன்வரவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்