கடலூர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை: லஞ்ச வழக்கில் விழுப்புரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் சிக்கியது எப்படி?, பரபரப்பு தகவல்கள்

லஞ்ச வழக்கில் விழுப்புரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடலூரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2018-04-15 23:30 GMT
நெல்லிக்குப்பம்,

விழுப்புரம் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலராக பணியாற்றுபவர் குமரேசன். இவர் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் புகார்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மாதந்தோறும் சார் பதிவாளர்களிடம் பணம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதன்பேரில் அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 9 மணிநேரம் நடந்த சோதனை முடிவில் அவரிடம் இருந்து கணக்கில் வராத 92 ஆயிரத்து 630 ரூபாயையும், முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார்கள்.

இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கடலூர் வெளிச்செம்மண்டலம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்த நேற்று முன்தினம் லஞ்சஒழிப்பு போலீசார் சென்றனர். ஆனால் அவரது வீடு பூட்டிக்கிடந்தது, வீட்டில் ஒரு கார் மட்டும் நின்றது. வீடு பூட்டிக்கிடந்ததால் அன்றைய தினம் சோதனை நடத்தவில்லை.

இந்த நிலையில் அந்த வீட்டுக்கு அவரது மனைவி வந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்பட 12 போலீசார் உடனே சென்றனர்.

அப்போது நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் நின்ற கார் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது மனைவியிடம் வீட்டில் கார் இல்லாதது பற்றி கேட்டனர். அதற்கு அவர், உறவினர் ஒருவர் வெளியில் எடுத்துச்சென்றிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார், அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது அவர், தான் புதுச்சேரியில் இருப்பதாகவும், சர்வீஸ் செய்வதற்காக காரை வெளியே எடுத்து வந்ததாகவும் முரண்பாடாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து குமரேசன் வீட்டில் சோதனையை தொடங்கினார்கள். அவரது வீட்டின் ஒவ்வொரு அறையையும் திறந்து அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். இதில் ஒரு சில ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. ஆனால் பணம், நகை எதுவும் சிக்கவில்லை. அவற்றை வங்கி லாக்கர்களில் குமரேசன் வைத்திருப்பதாக அவரது மனைவி கூறினாராம்.

வீட்டில் குமரேசன் இல்லாததால், செல்போனில் தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து விசாரிக்கலாம் என லஞ்சஒழிப்பு போலீசார் முயன்றனர். ஆனால் அவர் திருப்பதிக்கு சென்றிருப்பதால், செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது மனைவி கூறினாராம். இதனால் அவர் திரும்பி வந்த பிறகு அவரது வங்கி லாக்கர்களை திறந்து சோதனை நடத்த லஞ்சஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

லஞ்ச வழக்கில் சிக்கி உள்ள குமரேசனின் சொந்த ஊர் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள எல்லப்பன்பேட்டை. அவர் கடலூர் வெளிச்செம்மண்டலம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள வீட்டை சில மாதங்களுக்கு முன்பு தான் விலைக்கு வாங்கியதாகவும், அந்த வீட்டின் பரப்பளவை குறைத்து காண்பித்து பத்திரப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரை-ணையை தொடங்கினார்கள். கடந்த 6 மாதங்களாக அவரை தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். அதில் கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். லஞ்ச வழக்குகளில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து சிக்கி வருவது அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்