ஜிசாட்-29 செயற்கைகோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் நெல்லையில் இஸ்ரோ தலைவர் பேட்டி

கிராமப்புறங்களில் அதிவேக இணையதள வசதிக்காக ஜிசாட்-29 செயற்கைகோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என்று நெல்லையில் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

Update: 2018-04-15 23:00 GMT
நெல்லை,

நெல்லையை அடுத்த பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு ரூ.82 கோடியில் செயற்கைகோள் தகவல் சேகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலையில் நடந்தது. இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கடற்படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தகவல் தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. பலவிதமான செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பி தகவல்களை சேகரித்து வருகிறோம். செயற்கைகோள் அனுப்பும் தகவல்களை சேகரிக்க பாளையங்கோட்டை ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் புதிய தகவல் சேகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது.

இந்த மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். தகவல் சேகரிப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடங்கும் போது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுபோன்ற தகவல் சேகரிப்பு மையங்கள் வட மாநிலங்களில் மட்டும்தான் அமைக்கப்படும். தற்போது தென்னிந்தியாவில் முதன்முறையாக பாளையங்கோட்டையில் தகவல் சேகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் பிராட்பேண்ட் சேவை அதிக அளவு கிடைக்கும்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 மூலம் ஜிசாட்- 29 செயற்கைகோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும். அதன்பிறகு அடுத்தடுத்து பல்வேறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அதிவேக இணையதள வசதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் அதிவேக இணையதள வசதி அதிக அளவு கிடைக்கும்.

இந்த ஆண்டு இறுதியில் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதிநவீன தொலைத் தொடர்பு சேவைக்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோளின் தொடர்புகள் 2 நாட்களிலேயே துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த தவவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் செயற்கைகோள் இருக்கும் இடத்தை தேடினோம். தற்போது செயற்கைகோள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அதனுடன் தொலைத் தொடர்பு இணைக்கப்படும்.

பிரதமர் நரேந்திரமோடி, விவசாய பணி உள்ளிட்ட 150 திட்டங்களுக்கு செயற்கைகோள் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதற் கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். 

மேலும் செய்திகள்