கேரளாவில் மூங்கில் வெட்டும் வேலை: கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்கள் மீட்பு

கேரளாவில் மூங்கில் வெட்டும் வேலைக்கு சென்று கொத்தடிமைகளாக இருந்த வால்பாறை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

Update: 2018-04-15 22:45 GMT
கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை கீழ்புனத்தியில் வசித்து வரும் 10 பேரை கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி கேரள மாநிலம் புனலூர் வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் மூங்கில் வெட்டும் பணிக்காக ஒப்பந்ததாரர் ஒருவர் அழைத்து சென்றார்.

இதற்காக தொழிலாளர்களின் குடும்பம் ஒன்றிற்கு ரூ.1000 முன்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தினமும் ரூ.700 சம்பளம் தருவதாக கூறி உள்ளார். அங்கு அவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் வேலை செய்தனர்.

இந்த நிலையில் மூங்கில் வெட்டுவதை டெண்டர் எடுத்த கேரளாவை சேர்ந்தவருக்கும், வால்பாறை தொழிலாளர்களை அழைத்து சென்ற ஒப்பந்ததாரருக்கும் இடையே திடீரென்று பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவர் தொழிலாளர்களை அங்கேயே விட்டு, விட்டு சென்று விட்டார்.

இதன் காரணமாக சம்பளம் வழங்கப்படாததால் தொழிலாளர்கள் தங்களை ஊருக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் கேரளாவை சேர்ந்தவர் தொழிலாளர்களை ஊருக்கு அனுப்ப மறுத்து விட்டார்.

மேலும் ‘நிலுவைத்தொகை ரூ.1 லட்சம் உள்ளது. அதை திருப்பி தரும்வரை கொத்தடிமையாக வேலை செய்யவேண்டும். சம்பளம் எதுவும் கிடையாது. இது பற்றி போலீசாரிடம் புகார் செய்தால் வனப்பகுதியில் அனுமதியின்றி மரக்கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்ய சொல்லி விடுவோம் என மிரட்டியும் உள்ளார். அதோடு அவர்களை கண்காணிக்க ஆட்களையும் நியமித்து உள்ளனர்.

அதையும் மீறி வால்பாறை தொழிலாளர்களான முருகன், குருசாமி, பிரஜி ஆகியோர் தப்பி வந்தனர். அவர்கள் கேரளாவில் கொத்தடிமைகளாக உள்ள 7 பேரை காப்பாற்றுமாறு கோவையில் உள்ள ‘இயற்கை அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் முறையிட்டனர்.

இதையடுத்து தொழிலாளர்கள் இருக்கும் இடம் குறித்து அந்த அறக்கட்டளை நிர்வாகி வினோத்ராஜ் தகவல் சேகரித்து மீட்பு பணிக்கான நடவடிக்கை மேற்கொண்டார். கொத்தடிமையாக வைக்கப்பட் டவர்கள் புனலூரில் வனத்துறைக்குட்பட்ட சோதனைச் சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அங்கு கொத்தடிமைகளாக இருந்த ஆறுமுகம், சிவகுமார், கிருஷ்ணன், நாகராஜ், ஜீவா, ரவி, பழனிசாமி ஆகிய 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை திருச்சூர் ரெயில் நிலையம் வரை ஜீப்பிலும் பிறகு, கோவைக்கு ரெயிலிலும் தொண்டு நிறுவனத்தினர் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வால்பாறைக்கு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்