தேனி மலையடிவாரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழா
தேனி அல்லிநகரம் மலையடிவாரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தேனி,
தேனி அல்லிநகரம் மலையடிவாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்காக கடந்த 29-ந்தேதி கோவிலில் கொடியேற்றம் நடந்தது.
இதையடுத்து நேற்று முன் தினம் அல்லிநகரம் ஊருக்குள் உள்ள வீரப்ப அய்யனார் கோவிலில் இருந்து மின் அலங்காரத்தில் வீரப்ப அய்யனார் எழுந்தருளி பங்களாமேட்டில் உள்ள சேலைமலை அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தார். அல்லிநகரத்தில் இருந்து பெரியகுளம் சாலை வழியாக வரும் வழியெங்கும் பக்தர்கள் திரண்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். பின்னர் இரவில் மீண்டும் அல்லிநகரத்துக்கு சாமி ஊர்வலம் நடந்தது.
நேற்று காலையில் அல்லி நகரத்தில் இருந்து குதிரை வாகனத்தில் வீரப்ப அய்யனார் எழுந்தருளி மலைக்கோவிலுக்கு சென்றார். ஊர்வலத்தில் முளைப்பாரி எடுத்தும், காவடி ஆட்டம் ஆடியபடியும், அலகு குத்தியும் பக்தர்கள் சென்றனர். வழியெங்கும் பக்தர்கள் திரண்டு நின்று சாமியை தரிசனம் செய்தனர். கோவிலிலும் சாமியை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இரவில் சாமி நகர்வலம் நடந்தது.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு செல்லும் வழியின் இருபுறமும் ஏராளமான நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அரசியல் கட்சிகள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும், வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் சார்பிலும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர் களுக்கு நீர்மோர், பானக் காரம், இளநீர் போன்றவை வழங்கப்பட்டன.