தமிழ்ப்புத்தாண்டையொட்டி சேலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சேலத்தில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-04-14 22:30 GMT
சேலம்,

சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

சேலம் டவுன் ராஜகணபதி கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று காலை பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதன்பிறகு வெள்ளி கவசத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு ராஜகணபதிக்கு தங்ககவசம் அணிவித்து உச்சிகால பூஜை நடந்தது.

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டன. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு முத்தங்கி மற்றும் தங்ககவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. சேலம் சுகவனேசுவரர் கோவில் மற்றும் கோட்டை பெருமாள் கோவிலிலும் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காவடி பழனியாண்டவர் ஆசிரமம்

சேலம் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக்கவசம் சாத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சித்திரைக்கனி பூஜையும், சிறப்பு யாகம், பஞ்சாங்க பூஜை, குபேரர், குபேரலட்சுமி பூஜை மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி பூஜை நடந்தது. பிறகு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் லட்சுமி வெள்ளிக்காசு, தாம்பூலம் ஆகியவை வழங்கப்பட்டன. தங்கக்கவசத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலித்த முருகனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இரவில் கோவிலில் தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில்

சேலம் அரிசிப்பாளையம் தெப்பக்குளம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு சென்றனர். வீராணம் பகுதியில் உள்ள மூக்கரகாளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் வெள்ளி கவசம் அணிவித்து பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது. பெரமனூர் ஆறுமுகன் கந்தசாமி கோவிலில் சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஊத்துமலை முருகன் கோவில், குமரகிரி தண்டயுதபாணி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

விஷுக்கனி தரிசனம்

தமிழ்ப்புத்தாண்டையொட்டி சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகில் உள்ள தர்மசாஸ்தா அய்யப்பன் கோவிலில் விஷுக்கனி தரிசன நிகழ்ச்சி நடந்தது. மூலவர் அய்யப்பனுக்கு பல்வேறு பழங்களை கொண்டு கனி அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். டவுன் ரெயில் நிலையம் மெயின்ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பல்வேறு பழங்களை கொண்டு விசுக்கனி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதேபோல் சேலம் காசிவிசுவநாதர் கோவில், அம்மாபேட்டை வரதராஜப்பெருமாள் கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், சின்னத்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், பேர்லேண்ட்ஸ் வேங்கடாசலபதி கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில், சேலம் நெடுஞ்சாலைநகர் வரசித்தி விநாயகர் கோவில், ராஜாராம் நகர் தேவராஜகணபதி கோவில், அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவில் உள்பட சேலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்