வேலூர் அருகே நடந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒரு பெண் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. இதன் மூலம் வெடி விபத்தில் சிக்கிய அனைவருமே இறந்துவிட்டனர்.

Update: 2018-04-14 22:45 GMT
வேலூர்,

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் அப்துல்காதர். இவர், கன்சால்பேட்டை காந்திநகரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் கடந்த 7-ந் தேதி வழக்கம்போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஆலையின் மேற்கூரைகள் பறந்தன. மேலும் கட்டிட சுவர்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் ஆலையில் வேலைபார்த்து கொண்டிருந்த கன்சால்பேட்டை இந்திரா நகரை சேர்ந்த ஜெயபால் மனைவி தீபா (வயது 25) உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் இந்த விபத்தில் கொணவட்டம் இந்திராநகரை சேர்ந்த சிவக்குமார் (35) மற்றும் அவரது மனைவி புஷ்பலதா, காந்திநகரை சேர்ந்த ஷீலா (30), கவியரசன் (32) ஆகியோர் பலத்த தீக்காயமடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஷீலா, சிவக்குமார், கவியரசன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி வெவ்வேறு நாட்களில் உயிரிழந்தனர். புஷ்பலதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் புஷ்பலதாவும் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்த புஷ்பலதாவிற்கு நிவேதா (19), நிரோஷா (15) என்ற மகள்களும், சீனிவாசன் (17) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெடிவிபத்தில் தீக்காயம் அடைந்த அனைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது கன்சால்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்