சிவகிரி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை: ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை
சிவகிரி அருகே தீக்குளித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகிரி,
சிவகிரி அருகே தீக்குளித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம் வடக்குவீதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). அவருடைய மகன் சாமியப்பன் (வயது 38). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் சண்முகம். அவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுடைய மகள் சரண்யா (28).
சாமியப்பனுக்கும், சரண்யாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரணீத் (3) என்ற மகன் உள்ளான். சாமியப்பன் தனது தந்தை, மனைவி, மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சாமியப்பனும், பிரணீத்தும் வீட்டின் படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தார்கள். சுந்தரம் வீட்டின் மற்றொரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். சரண்யா வீட்டின் சமையல் அறையில் செல்போனில் தனது தாய் சரஸ்வதியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த சுந்தரம் சமையல் அறைக்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையே சத்தம் கேட்டு சாமியப்பனும் அங்கு சென்று பார்த்தார். அங்கு சரண்யா உடல் கருகிய நிலையில் மயங்கி கிடந்தார். உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் வந்து பார்த்து பரிசோதனை செய்துவிட்டு சரண்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சரண்யாவுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகளே ஆவதால் ஈரோடு ஆர்.டி.ஓ.நர்மதாதேவி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.