திருப்பூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது

திருப்பூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-14 21:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் ஊரக போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாராபுரம் ரோட்டில் ஒரு பேக்கரியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த திருப்பூர் சந்திராபுரத்தை சேர்ந்த சின்னதம்பி (வயது 61) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 பாக்கெட் புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபோல் தாராபுரம் ரோட்டில் மற்றொரு பேக்கரியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ரவி (52) என்பவரை ஊரக போலீசார் கைது செய்து, அங்கிருந்த 7 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் வீரபாண்டி பகுதிகளில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குப்பாண்டம்பாளையம் பகுதியில் ஒரு பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து பெட்டிக்கடைக்காரரான தனலட்சுமி நகரை சேர்ந்த காசிநாதன் (62) என்பவரை போலீசார் கைது செய்து, அவருடைய பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 38 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் திருப்பூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்