ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி கோவை என்ஜினீயரிங் மாணவர்கள் 3 பேர் பலி

பொள்ளாச்சி அருகே ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி கோவை என்ஜினீயரிங் மாணவர்கள் 3 பேர் பலியானார்கள். அவர்களை காப்பாற்ற முயன்ற சுற்றுலா பயணியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-04-13 22:15 GMT
பொள்ளாச்சி,

கோவையை அடுத்த துடியலூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்து படித்து வருகின்றனர். தமிழ்புத்தாண்டையொட்டி நேற்று விடுமுறை என்பதால் விடுதியில் தங்கி படித்த 10 மாணவர்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் நேற்று காலை 9.30 மணிக்கு கோவையில் இருந்து பஸ்சில் பொள்ளாச்சிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து பஸ்சில் ஆழியாறு அணைக்கு சென்று, அணை, அணை பூங்கா மற்றும் மீன்பண்ணைகளை சுற்றி பார்த்தனர். அதன் பின்னர் அங்குள்ள ஒரு ஓட்டலில் மதியம் சாப்பிட்டனர்.

இதனை தொடர்ந்து மாணவர்கள் குளிப்பதற்காக ஆழியார் அணையை ஒட்டி உள்ள தடுப்பணைக்கு சென்றனர். தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி இருந்ததை பார்த்ததும் மாணவர்கள் ஒவ்வொருவராக உள்ளே இறங்கி குளிக்க தொடங்கினர். ஒரு மாணவர் மட்டும் குளிக்காமல் கரையில் அமர்ந்து இருந்தார்.

தண்ணீரில் இறங்கிய மாணவர்கள் 9 பேரும் உற்சாகமாக குளித்துக்கொண்டு இருந்தனர். இதில் ஸ்ரீஹரிகரன் (வயது 18), லோகேஷ்வரன் (18), வெங்கடேஷ் (18) ஆகிய 3 பேரும் தடுப்பணையில் ஆழம் மிகுந்த பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

அப்போது 3 பேரும் சேற்றில் சிக்கி கொண்ட னர். அதில் இருந்து வெளியே வர மாணவர்கள் 3 பேரும் முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. சிறிது சிறிதாக தண்ணீரில் மூழ்க தொடங்கினர். தண்ணீரில் தத்தளித்த 3 பேரும் கைகளை நீட்டி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டனர். இதனை பார்த்து அருகில் குளித்துக்கொண்டிருந்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நண்பர்கள் தண்ணீரில் மூழ்குவதை பார்த்த சக மாணவர்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.

இந்த நிலையில் அணைக்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த திருப்பூர் மாவட்டம் அவினாசி ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் மோகன்குமார் (26) தண்ணீரில் மூழ்கிய மாணவர்களை காப்பாற்ற தடுப்பணையில் குதித்தார். அவர் நீச்சல் அடித்தவாறு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கிய பகுதிக்கு சென்றார். மாணவர்களை காப்பாற்ற முயன்றபோது மோகன்குமாரும் சேற்றில் சிக்கி கொண்டார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.

இதில் சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து ஆழியாறுக்கு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் சக மாணவர்கள் சேர்ந்து தண்ணீரில் மூழ்கிய 4 பேரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆழியாறு போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கி பலியான மாணவர்கள் விவரம் வருமாறு:-

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி என்பவரது மகன் ஸ்ரீஹரிகரன், பயோமெடிக்கல் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நாமக்கல்லை பழையபட்டி சேர்ந்த விஜயராகவன் மகன் லோகேஷ்வரன், இவரும் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக்நகர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் வெங்கடேஷ், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

பலியான சுற்றுலா பயணி மோகன்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. வீடு, வீடாக சென்று தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நண்பர்கள் 5 பேருடன் சுற்றுலா வந்த இடத்தில் 3 பேரின் உயிரை காப்பாற்ற முயன்றபோது தனது உயிரை விட்டார்.

மோகன்குமார் குறித்து அவரது நண்பர்கள் கூறியதாவது:-

எங்களுடைய உயிர் நண்பனாக இருந்தவன் மோகன்குமார். அவன் எப்போதுமே உதவும் குணம் படைத்தவன். அதனால்தான் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்து என்று அழைத்தபோது 3 பேரையும் விரைந்து சென்று காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையே காப்பாற்ற முடியாமல் இறந்து விட்டான். அவருக்கு சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிந்தது. அதற்கு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இந்த நிலையில்தான் தற்போது மாணவர்களை காப்பாற்றும் முயற்சியில் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். எங்கள் கண்முன் நேர்ந்த இந்த சோகத்தை எங்களால் மறக்க முடியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த சம்பவம் குறித்து ஆழியாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவர்கள் உள்பட 4 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்