பாட்டி, பேத்தியை கொன்று நகை, பணம் கொள்ளை கைதான பக்கத்து வீட்டு வாலிபர் குற்றவாளி
சயானில் பாட்டி, பேத்தியை கொன்று நகை, பணம் கொள்ளையடிக் கப்பட்ட வழக்கில் கைதான பக்கத்து வீட்டு வாலிபர் குற்றவாளி என செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
சயானில் பாட்டி, பேத்தியை கொன்று நகை, பணம் கொள்ளையடிக் கப்பட்ட வழக்கில் கைதான பக்கத்து வீட்டு வாலிபர் குற்றவாளி என செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பாட்டி, பேத்தி கொலை
மும்பை சயானை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி ஷீத்தல். இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகள் இருந்தாள். இவர்களது வீட்டில் ஷீத்தலின் தாய் ரஞ்சனாவும் தங்கியிருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி கணவர், மனைவி இருவரும் வேலைக்கு சென்றிருந்தனர். பாட்டி, பேத்தி இருவரும் வீட்டில் இருந்தனர்.
இரவு வேலை முடிந்து ஷீத்தல் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டுக்குள் அவரது தாய் மற்றும் மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். வீட்டில் இருந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவை காணாமல் போயிருந்தன.
வாலிபர் குற்றவாளி
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார் கள். இதில் ஷீத்தலின் பக்கத்து வீட்டை சேர்ந்த விஷால் ஸ்ரீவஸ்தவ் (வயது29) என்பவர் தான் பாட்டி, பேத்தி இருவரையும் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அவருக்கு எதிராக 23 பேர் சாட்சி அளித்தனர். இதன் மூலம் அவர் மீதான கொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
இந்த வழக்கில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அப்போது விஷால் ஸ்ரீவஸ்தவை நீதிபதி குற்றவாளி என அறிவித்தார். அவருக்கான தண்டனை விவரம் நாளை மறுதினம் அறிவிக்கப்பட உள்ளது.