சாலையோரங்களில் உள்ள மரங்களில் ஆணி அடித்து தொங்கவிடப்படும் பதாகைகள்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகளை தொங்கவிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி,
மரங்கள் மனிதர்களுக்கு கிடைத்துள்ள மகத்தான வரம். இத்தகைய மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சாலை விரிவாக்கம், குடியிருப்பு விரிவாக்கம், மரங்கள் வெட்டிக் கடத்தல் போன்ற காரணங்களால் மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் நிழலுக்கு ஒதுங்குவதற்கு கூட மரங்களை தேடும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. எனவே, அதிக அளவில் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உள்ளது. வருங்கால சந்ததிகள் நலமோடு வாழ்வதற்கு ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவுக்கு மரங்களை வளர்க்க வேண்டும்.
அதே நேரத்தில் விளம்பர, வியாபார மோகத்தால் சாலையோர மரங்கள் காயம்பட்டு நிற்கின்றன. மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகள் கட்டித் தொங்கவிடப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை விடப்பட்டால், கோடை காலத்தில் பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதற்கான விளம்பர பதாகைகளும், பள்ளி, கல்லூரியில் கோடை விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடர்பாகவும் மரங்களில் விளம்பர பதாகைகள் தொங்கவிடப்பட்டு வருகிறது. வழக்கமான கால கட்டத்தைவிட கோடை காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடக்கும். அதேபோல் பல்வேறு வணிக நிறுவனங்களும் மரங்களில் விளம்பர பதாகைகளை தொங்க விடுகின்றன.
இதுபோன்று விளம்பரம் செய்பவர்கள் பொதுவாக சாலையோர மரங்கள், அரசு அலுவலகங்களில் நிற்கும் மரங்களையே தேர்வு செய்கின்றனர். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இதுபோன்று விளம்பரம் செய்வதற்காக மரங்களை வதைக்கும் சம்பவங்கள் அதிக இடங்களில் நடந்து வருகின்றன. சாலையோர மரங்கள் விதவிதமான பதாகைகளை சுமந்து கொண்டு நிற்கின்றன. அந்த வகையில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகள் தொங்க விடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பதாகைக்கும் ஆணிகள் ஆழமாக அடிக்கப்படுவதால், மரங்கள் காயப் படுகின்றன. இதனால் காலப்போக்கில் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பட்டுப்போகும் அபாயமும் உள்ளது.
மரங்களை புதிதாக வளர்க்க வேண்டிய கடமை எப்படி எல்லோருக்கும் உள்ளதோ, அதேபோல், இருக்கும் மரங்களை பாதுகாக்கும் கடமை அரசுக்கு அதிக அளவில் உள்ளது. எனவே, சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகளை தொங்கவிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரங்களில் உள்ள மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க நெடுஞ்சாலைத்துறையும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளும், அரசு அலுவலக வளாகங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அந்தந்த அரசு அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.