கடல் நீரோட்ட மாற்றத்தால் தனுஷ்கோடி கடலில் புதிதாக உருவான மணல் திட்டு நடந்து சென்று சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

கடல் நீரோட்ட மாற்றத்தால் தனுஷ்கோடி கடலில் புதிதாக உருவான மணல் திட்டுக்கு நடந்து சென்று சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.

Update: 2018-04-13 22:00 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி கடல் பகுதி. ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கும்–இலங்கை தலைமன்னாருக்கும் இடையே உள்ள கடல் பகுதிகளில் 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் நமது இந்திய எல்லை பகுதி 5–வது மணல் திட்டுடன் முடிவடைகிறது. தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள இந்த மணல் திட்டுகளில் பகல் முழுவதும் கடல் நீர் வற்றிய நிலையிலும் இரவு நேரங் களில் கடல் நீர் சூழ்ந்தும் காணப்படுவது வழக்கம். தமிழக கடல் பகுதி களிலேயே கடல் சீற்றம், கடல் நீரோட்டம் அதிகமாக உள்ள கடல் பகுதி தனுஷ்கோடி.

இந்நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் நீரோட்ட மாற்றத்தால் அரிச்சல்முனை கடற்கரையின் மிக அருகில் தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் புதிதாக ஒரு மணல் திட்டு உருவாகி உள்ளது. கடலின் நடுவே புதிதாக உருவாகி தெளிவாக வெளியே தெரியும் இந்த மணல் திட்டை காண சுற்றுலாபயணிகள் தனுஷ்கோடி பகுதியல் குவிந்து வருகின்றனர்.

இவர்கள் ஆபத்தை அறியாமல் கடலில் இறங்கி மணல்திட்டுக்கு சென்று வருகின்றனர். அங்கு ஆர்வத்தடன் மணல் திட்டில் நின்றபடி செல்பி எடுத்த வருவதுடன் சிறிது நேரம் அந்த மணல் திட்டிலேயே அமர்ந்து சுற்றி காணப்படும் கடல் அழகை ரசித்து வருகின்றனர்.

வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடலில் கடந்த 5 மாதத்திற்கு மன்பு புதிதாக ஒரு மணல் திட்டு உருவானது. 2 மாதம் வரை தெளிவாக வெளியே தெரிந்த அந்த மணல் திட்டு நாளடைவில் கடல் நீரோட்ட மாற்றத்தால் கடல் நீர் சூழ்ந்து மூடிவிட்டது. தற்போது தனுஷ்கோடி தென் கடலில் மீண்டும் ஒரு மணல் திட்டு உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்