திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு பயணிகள் சேவை மூலம் வருவாய் கிடைத்துள்ளது

திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு பயணிகள் சேவை மூலம் ரூ.322 கோடியே 36 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது என ரெயில்வே வார விழாவில் கோட்ட மேலாளர் உதய்குமார் ரெட்டி தெரிவித்தார்.

Update: 2018-04-13 22:30 GMT
திருச்சி,

63-வது ரெயில்வே வார விழா நேற்று திருச்சி கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் திருச்சி கோட்ட மேலாளர் உதய் குமார் ரெட்டி கலந்து கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றிய ரெயில்வே ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி கோட்டத்தில் 2017-18ம் நிதியாண்டில் 3 கோடியே 78 லட்சம் பயணிகள் ரெயில் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதன் மூலம் ரூ.322 கோடியே 36 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.33 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ரூ.300 கோடியே 24 லட்சம் தான் வருவாய் கிடைத்தது. இதேபோல சரக்குகளை கையாண்டதன் மூலம் ரூ.391 கோடியே 22 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது. இந்த ஆண்டு திருச்சி கோட்டத்தில் 65 கிலோ மீட்டர் வரை இருவழி அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு திருச்சி கோட்டத்தில் உள்ள 57 ஆள் இல்லா ரெயில்வே கேட்கள் மூடப்பட்டு உள்ளன. கோட்டங்களுக்கு இடையேயான திறன் போட்டிகளில் திருச்சி கோட்டம் 2-வது இடத்தை பிடித்து உள்ளது. இதுபோக வர்த்தகம், பயணிகளின் அடிப்படை வசதி, பொறியியல், மின் மயமாக்கல் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் கூடுதலாக 6 விருதுகளை திருச்சி கோட்டம் பெற்று உள்ளது. இதற்கான விருதுகளை கடந்த 11-ந் தேதி நடைபெற்ற ரெயில்வே வாரவிழாவில் பொது மேலாளர் குல்ஸ்ரஸ்தா வழங்கினார். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் திருச்சி கோட்டம் பெற்று உள்ள விருதுகளை கோட்ட மேலாளரிடம் அதிகாரிகள் காட்டி வாழ்த்து பெற்று கொண்டனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திருச்சி கோட்ட கூடுதல் மேலாளர் ஹரிஸ் உள்பட ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இன்னொரு கூடுதல் கோட்ட மேலாளர் ஆய்வு வரவேற்றார். முடிவில் கோட்ட பணியாளர் நல அதிகாரி சவுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்