நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் உண்ணாவிரதம்
நாடாளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா வினர் உண்ணா விரதம் இருந்தனர்.
மும்பை,
நாடாளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் உண்ணாவிரதம் இருந்தனர். மும்பையில் நடந்த போராட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார்.
உண்ணாவிரதம்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ‘ஜனநாயகம் காப்போம்' என்ற பெயரில் நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். அதன்படி நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கட்சி நிர்வாகிகளுடன் உண்ணா விரதம் இருந்தனர்.
மும்பையில் வில்லேபார்லேயில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜனதா மும்பை தலைவர் ஆஷிஸ் செலார், பூனம் மகாஜன் எம்.பி. மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கிரித் சோமையா எம்.பி.
சயான் சர்க்கிளில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மந்திரி வினோத் தாவ்டே மற்றும் திரளான பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.
பாண்டுப் ரெயில் நிலையம் அருகில் கிரித் சோமையா எம்.பி. தலைமையிலும், போரிவிலியில் கோபால் ஷெட்டி எம்.பி. தலைமையிலும் பா.ஜனதாவினர் உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர்.
தானேயில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பா.ஜனதா தொண்டர்களுடன் உண்ணா விரதத்தில் ஈடுபட்டார்.
இதுபோல புனே, நவிமும்பை, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பா.ஜனதாவினர் ஒருநாள் உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.