கட்சியில் இணையுமாறு பா.ஜனதா அழைப்பு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கும்ப்ளே, டிராவிட் நிராகரிப்பு
பா.ஜனதாவில் இணையுமாறு அக்கட்சி விடுத்த அழைப்பை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கும்ப்ளே, டிராவிட் ஆகியோர் நிராகரித்தனர்.
பெங்களூரு,
பா.ஜனதாவில் இணையுமாறு அக்கட்சி விடுத்த அழைப்பை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கும்ப்ளே, டிராவிட் ஆகியோர் நிராகரித்தனர்.
பல சுற்று பேச்சுவார்த்தை
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. அதே போல் கர்நாடகத்தை காங்கிரசிடம் இருந்து கைப்பற்ற பா.ஜனதாவும் வியூகங்களை வகுத்து இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்களிடையே எதிர்ப்பு அலை இல்லாததால், கர்நாடகத்தில் வெற்றி பெறுவதில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பாகமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரை தங்களது கட்சியில் இணையுமாறு பா.ஜனதா அழைப்பு விடுத்தது.
அதாவது மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அனில் கும்ப்ளே, டிராவிட் ஆகியோருக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கட்சியின் பலத்தை அதிகரிக்க அவர்களை கட்சியில் இணைக்கும் முயற்சியில் பா.ஜனதா இறங்கியது. அதன்படி அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருடன் பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிராகரித்துவிட்டனர்
ஆனால் அவர்கள் இருவரும் பா.ஜனதா உள்பட எந்த அரசியல் கட்சிகளிலும் சேர விரும்பவில்லை என்றும், அரசியலில் இருந்து தொலைவில் இருக்கவே விரும்புவதாகவும் கூறி பா.ஜனதா விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துவிட்டனர். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் அனில் கும்ப்ளே கர்நாடக வன உயிரின வாரியத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.
இதை கருத்தில் கொண்டு பா.ஜனதா அவர்களை அணுகியது. ஆனால் பா.ஜனதாவின் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.