அரசுப்பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தமிழ் செய்தித்தாள் வாசித்து உலக சாதனைக்கு முயற்சி

அரசு பள்ளிகளில் வருகிற 19-ந் தேதி மாணவ-மாணவிகள் தமிழ் செய்தித்தாள் வாசித்து உலக சாதனைக்கு முயற்சி நடக்கிறது என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-04-12 22:30 GMT
செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் அரசுப்பள்ளிகள் அதிகமாக உள்ள மாவட்டம் ஆகும். இத்தகைய அரசுப்பள்ளிகளில் கிராமப்புறத்தில் வசித்து, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப் பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீத அடிப்படையில் பின்தங்கிய மாவட்டமாக திருவண்ணாமலை இருந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை கல்வியிலும், தேர்ச்சி சதவீதத்திலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது ஆலோசனைப்படி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்களிடையே தமிழ் வாசித்தல் உள்ள குறைபாடுகளை அகற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் சிறப்பு கருத்தாளர்களை கொண்டு பல்வேறு கட்டமாக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இந்த நிலையில் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் முதன்முறையாக உலக அளவில் சாதனை நிகழ்வினை வருகிற 19-ந்தேதி (வியாழக்கிழமை) நடத்திடும் முயற்சியை மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து முதன்மைக்கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறியதாவது:-

22 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அவர்களின் தாய்மொழியை வாசிக்க வைப்பதற்காக பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடி வாசித்தது உலக சாதனையாக கருதப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி 2-வது முறையாக இந்தியாவில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் ஒரே நேரத்தில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சம் மாணவ-மாணவிகளை கொண்டு வருகிற 19-ந்தேதி காலை 9 மணிக்கு தொடங்கி தொடர்ந்து 15 நிமிடங்கள் தாய்மொழியான தமிழ் செய்தித்தாளை வாசிக்க உள்ளனர்.

தொடர்ந்து 15 நிமிடத்தில் உலகளவிலான செய்திகள், இந்திய அளவிலான செய்திகள், தமிழக அளவிலான செய்தி, மாவட்ட அளவிலான செய்திகள், விளையாட்டு செய்திகள் என செய்தித்தாளில் உள்ள 5 செய்திகளை வாசிக்க செய்தும், அடுத்த 5 நிமிடத்தில் வாசித்த செய்திகளை பற்றி குறிப்பு எழுதிட செய்கின்றனர்.

மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் நடக்கும் புதிய முயற்சியினை வீடியோ, புகைப்படங்கள் பதிவு செய்து உலக சாதனை அங்கீகாரம் வழங்கிடும் கின்னஸ் நிறுவனம் உள்பட 7 நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்க உள்ளோம். உலக சாதனையில் இடம் பெற்றவுடன் உலக சாதனையில் இடம் பெற்றுள்ள பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பாராட்டி சான்றிதழ் வழங்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதன்மைக்கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளிடையே செய்தித்தாள் வழங்கி மாணவர்கள் வாசித்து உலக சாதனை ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி செய்யாறு தாலுகா அனப்பத்தூர் உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு நேற்று ‘தினத்தந்தி’ நாளிதழ் வழங்கப்பட்டு 15 நிமிடங்கள் 5 வகையான செய்திகள் வாசிக்க செய்தும், 5 நிமிடங்கள் வாசித்த செய்தி பற்றிய குறிப்பு எழுதிட பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்