பெரம்பூர் ரெயில் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ‘உதயம்’ திட்டம் தொடக்கம்
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி ‘உதயம்’ என்கிற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
பெரம்பூர்,
ரெயில் நிலையங்களில் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்கவும், வீடுகளில் கோபித்துக்கொண்டு ரெயிலில் வரும் குழந்தைகளை சமூக விரோதிகள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்வதை தடுக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு, பெரம்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட ரெயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ஜார்ஜ் தொடங்கிவைத்தார். பின்னர் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், தென்னக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அன்குர் தியாகி, நந்தபகதூர் மற்றும் செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் பொதுமக்கள் என 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.