கடையம், பாவூர்சத்திரத்தில் விவசாய தொழிலாளர்கள் போராட்டம் 150 நாள் திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தல்
கடையம், பாவூர்சத்திரத்தில் 150 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி நேற்று விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையம்,
கடையம், பாவூர்சத்திரத்தில் 150 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி நேற்று விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனு கொடுக்கும் போராட்டம்
கடையத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், யூனியன் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராமகிருஷ்ணன், மாதர் சங்கம் வேலம்மாள், மேனகா, விவசாய சங்கத்தை சேர்ந்த முருகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் 23 நகர பஞ்சாயத்துகளை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள், 150 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள்
அப்போது மத்திய, மாநில அரசுகள் 150 நாள் வேலை திட்டத்தை முடக்க கூடாது, பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும், சட்ட கூலி ரூ.205 வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசரெங்கராஜலுவிடம் மனுக்களை கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றளர்.
பாவூர்சத்திரம்
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி கீழப்பாவூர் யூனியன் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட நிர்வாகி தங்கம் தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் ஜெயராஜ், வட்டார விவசாயிகள் சங்க செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் யூனியன் ஆணையாளர் ஜானகியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் வேல்முருகன், இந்திய மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கற்பகவல்லி, பீடி சங்க ஒன்றிய செயலாளர் ஆரியமுல்லை உள்பட பலர் கலந்து கொண்டனர்.