காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் உள்பட 20 பேர் சிறையில் அடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் இரவில் திரண்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் உள்பட 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2018-04-12 23:00 GMT
திருச்சி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து தென்னூர் அண்ணாநகர் செல்லும் இணைப்பு சாலையில் நேற்று முன்தினம் இரவு மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு திடீரென போராட்டம் நடத்தினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் காயம் அடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களை பார்க்க சென்ற இளைஞர்கள் ஆத்திரம் அடைந்து, அந்த வழியாக வந்த அரசு பஸ் கண்ணாடியை உடைத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் 31 பேர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மீதமுள்ள 20 பேர் உறையூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் நேற்று மாலை வரை போலீசார் விடுவிக்கவில்லை. இதனை கண்டித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அரசு மருத்துவமனை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 5 பேர் மீது புத்தூர் அரசு மருத்துவமனை போலீசாரும், தென்னூர் பட்டாபிராமன்பிள்ளை சாலையில் பஸ் கண்ணாடியை உடைத்த மாணவர்கள் உள்பட 15 பேர் மீது தில்லைநகர் போலீசாரும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தினேஷ், மாநகர தலைவர் இப்ராகீம் உள்பட 20 பேரும் நேற்று இரவு திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-4 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மாஜிஸ்திரேட்டு முன் 4 பேர் தங்களது சட்டையை கழற்றி காட்டி போலீஸ் தடியடியில் காயம் அடைந்ததாக கூறினார்கள். அவர்களை வருகிற 20-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திருநாவுக்கரசு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து 20 பேரும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். அப்போது அவர்கள் தங்கள் மீது பொய் வழக்கு போட்டு இருப்பதாக கோஷம் எழுப்பினார்கள். மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் வேனுக்கு முன் நின்று மறியல் செய்தனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் 20 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்