பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-04-12 23:00 GMT
மணப்பாறை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மக்கள்அதிகாரம் அமைப்பினர், விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணப்பாறையில், ம.தி.மு.க.மாநில மாணவரணி செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஜனசக்திஉசேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டச் செயலாளர் ராஜகோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் மதனகோபால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பாலு மற்றும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் கருப்பு சட்டை அணிந்தும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து கோரிக்கைகளை விளக்கி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி தந்தை பெரியார் சிலை அருகே வந்தனர். பின்னர் அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க.சார்பில் மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளிலும், கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடிய திருச்சி, திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியின் வருகையை கண்டித்தும் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே நேற்று காலை மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், திருவெறும்பூர் தாலுகா பகுதிகளில் பல இடங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. திருவெறும்பூர் மேம்பால பகுதிகளில் உ ள்ள மின் கம்பங்கள் மற்றும் பர்மா காலனி, திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.

திருவெறும்பூரை அடுத்துள்ள வேங்கூரில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும், விவசாய சங்கம் சார்பிலும் கருப்பு கொடியுடனும், கருப்பு பட்டை அணிந்தும், விவசாய சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையிலும், புலவர் முருகேசன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல துவாக்குடி, பாய்லர் ஆலை குடியிருப்பு, நவல்பட்டு அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், கடைகளில் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.

மண்ணச்சநல்லூர்் நகர தி.மு.க. அலுவலகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான தி.மு.க. வினர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். 

மேலும் செய்திகள்