மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு ரூ.4½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

ராங்கியம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.4½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

Update: 2018-04-12 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகாவிற்கு உட்பட்ட ராங்கியம் கிராமத்தில் மக்்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். தொடர்ந்து சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் முதியோர் உதவித்தொகைக்கான காசோலை, 30 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணை களை வழங்கினார். வேளாண்மைத்துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு 2 மலைத்தூவான் கருவியும், 2 விவசாயிகளுக்கு மண்வள அட்டையும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் அட்டைகள் என மொத்தம் 53 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 623 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். மேலும் ராங்கியம் கிராமத்தில் பொதுமக்களிடம் இருந்து 78 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, இதில் 52 கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டு நலத்திட்டம் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இந்த முகாமில், வேளாண்மைத்துறை, கால்நடை பரா மரிப்புத்துறை, செய்தித்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. முகாமில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மண்டல இணை இயக்குனர் நசீர், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜெயராணி, மாவட்ட துணைப்பதிவாளர் (பொதுவிநியோகத்திட்டம்) செல்வராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆண்டிமடம் வட்டாட்சியர் ராஜமூர்த்தி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்