வண்டலூர் பூங்காவில் விலங்குகளை பற்றி மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ள கோடைகால முகாம்
வண்டலூர் பூங்காவில் விலங்குகளை பற்றி மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ள கோடைகால முகாம் தொடங்கியது.
வண்டலூர்,
வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் 175 இனங்களில் 2 ஆயிரத்து 379 எண்ணிக்கையிலான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது.
இந்த கோடை விடுமுறையில் பூங்காவிலுள்ள ஊர்வன, பாலூட்டிகள், பறவைகள் என ஒவ்வொரு உயிரினங்கள் பற்றியும் மாணவ- மாணவிகள் அறிந்துகொள்ளும் வண்ணம் பூங்காவில் நேற்று முதல் அடுத்த மாதம் 12-ந் தேதி வரை 5 குழுக்களுக்கு 4 நாட்கள் கோடைகால முகாம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
5-ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவ- மாணவிகள் பங்குபெறும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தூதுவர்கள்
இந்த முகாமில் பங்குபெறும் மாணவ- மாணவிகள் உயிரியல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கப்படுவதுடன் அவர்கள் ஆண்டுக்கு 10 முறை பூங்காவிற்கு இலவச நுழைவு அனுமதி பெறும் வகையிலும் மாணவ-மாணவியர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை 9 மணியளவில் பூங்கா பள்ளியில் முதல் குழுவின் கோடைகால முகாம் பூங்கா இயக்குனர் தலைமையில் தொடங்கப்பட்டது. மேலும் பூங்கா துணை இயக்குனர், விலங்கு மருத்துவர்கள் மற்றும் உயிரியலாளர்கள் கலந்துகொண்டு விலங்குகள் பற்றி உரையாடல் நடத்தினர். இதில் 28 மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பயிற்சி கையேடு
இந்த முகாமில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுடன் அருவி படத்தின் நடிகை அதிதி பாலன் கலந்துரையாடி அவர்களை ஊக்குவித்தார். முகாமில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு பூங்காவின் சார்பாக பயிற்சி கையேடு மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதுபோன்ற முகாம் முதல் முறையாக பூங்காவில் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.