குளிக்க சென்றபோது பரிதாபம்: முல்லைப்பெரியாற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்ற தொழிலாளி ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.
தேனி,
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி சுப்பிரமணியசிவா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). கூலித்தொழிலாளி. நேற்று இவர், பழனிசெட்டிபட்டி கருப்பசாமி கோவில் அருகே முல்லைப்பெரியாற்றில் குளித்தார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.