அந்தியூர் வனப்பகுதியில் நோய் தாக்கி குட்டி யானை சாவு

அந்தியூர் வனப்பகுதியில் நோய் தாக்கி குட்டி யானை ஒன்று இறந்துள்ளது.

Update: 2018-04-11 21:17 GMT
அந்தியூர்,

அந்தியூர் வனப்பகுதியில் வனச்சரகர் ராமராஜ் மற்றும் வனஊழியர்கள் நேற்று மாலை 5 மணி அளவில் ரோந்து சென்றனர். அப்போது தனக்குமடுவு என்ற பகுதியில் சென்றபோது துர்நாற்றம் வீசியது. அதனால் அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு குட்டி யானை இறந்து கிடந்தது.

அப்போது அங்கு இறந்த குட்டி யானையின் அருகே தாய் யானை நிற்பதை பார்த்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் இறந்த குட்டி யானையில் அருகிலேயே சுற்றியபடி பாசப்போராட்டம் நடத்தியது.

மேலும் அந்த யானை வனஊழியர்களையும் விரட்டியது. இதனால் அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். பின்னர் தாய் யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர் அசோகன் அங்கு வரவழைக்கப்பட்டு,, இறந்த குட்டியானையில் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.. அப்போது அவர் கூறும்போது, ‘இறந்தது 3 மாத குட்டி பெண் யானை ஆகும். குடற்புழு நோய் தாக்கி குட்டி யானை இறந்து உள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்