கர்நாடகத்தை விட்டு காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் வரை பா.ஜனதா தொண்டர்கள் ஓய்வு எடுக்கக்கூடாது எடியூரப்பா வேண்டுகோள்

கர்நாடகத்தை விட்டு காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் வரை பா.ஜனதா தொண்டர்கள் ஓய்வு எடுக்கக் கூடாது என்று எடியூரப்பா வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2018-04-11 21:15 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தை விட்டு காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் வரை பா.ஜனதா தொண்டர்கள் ஓய்வு எடுக்கக் கூடாது என்று எடியூரப்பா வேண்டுகோள் விடுத்தார்.

குறுக்கு வழிகளை கையாண்டு...

கர்நாடக பா.ஜனதா சார்பில் தேர்தலை நிர்வகிப்பது தொடர்பான கருத்தரங்கு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாட்டில் காங்கிரஸ் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று அக்கட்சி பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகிறது. காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்க வாக்காளர்கள் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும். சித்தராமையா தோல்வி பயத்தால் வருணா மற்றும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட தயங்குகிறார். வேறு தொகுதியை தேட ஆரம்பித்து உள்ளார்.

எல்லாவிதமான வியூகங்களையும்...

சொந்த தொகுதியிலேயே மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட சித்தராமையா வேறு தொகுதி மக்களின் நம்பிக்கையை எப்படி பெற முடியும்?. இத்தகையவர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்று சொல்வது நகைச்சுவையாக உள்ளது. வருணா மற்றும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா மற்றும் அவருடைய மகனை தோற்கடிக்க நாங்கள் எல்லாவிதமான வியூகங்களையும் வகுத்துள்ளோம்.

மாநிலத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சித்தராமையா தோற்பது உறுதி. சித்தராமையா சாமுண்டீஸ்வரியிலும், அவருடைய மகனை வருணா தொகுதியிலும் தோற்கடிக்க வாக்காளர்கள் தீர்மானித்துவிட்டனர். சொந்த தொகுதியையே தக்க வைத்துக்கொள்ள முடியாதவர், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த முடியுமா?.

ஆட்டம் கண்டுவிடும்

மைசூருவில் காங்கிரஸ் தோற்றால் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்டம் கண்டுவிடும். கர்நாடகத்தை விட்டு காங்கிரஸ் ஆட்சியை அகற்றும் வரை பா.ஜனதா தொண்டர்கள் ஓய்வு எடுக்கக்கூடாது. இன்னும் ஒரு மாத காலம் நீங்கள் உங்களின் தொகுதிகளை விட்டு எங்கும் செல்லாமல் கட்சி பணியை தீவிரமாக ஆற்ற வேண்டும்.

உத்தரபிரதேசத்தை போல் கர்நாடகத்திலும் ஆச்சரியம் அளிக்கும் தேர்தல் முடிவுகள் வரும். இதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். யார் என்ன பேசினாலும், வாக்காளர்கள் பா.ஜனதா பக்கம் தான் உள்ளனர். நமது கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பா.ஜனதாவின் வெற்றிக்கு வியூகங்களை வகுத்துள்ளார். மத்திய அரசு தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதுபற்றி நீங்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

ஜனநாயக விரோத போக்கை...

மத்திய மந்திரி அனந்தகுமார் பேசுகையில், “நாளை (அதாவது இன்று) பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா எம்.பி.க்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தை சிலர் நடத்தவிடாமல் தடுக்கிறார்கள். அவர்களின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து இந்த உண்ணாவிரதம் நடக்கிறது. காங்கிரசிடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்ற முழக்கத்துடன் இந்த உண்ணாவிரதம் நடைபெறும். காங்கிரசில் எப்போதும் ஜனநாயகம் இல்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தொண்டர்கள் எப்போதும் தலைவர் ஆக முடியாது“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், “உடலில் கோடுகளை போட்டுக்கொண்ட உடனேயே ராகுல் காந்தி புலி ஆகிவிட முடியாது. மத்திய அரசுக்கு எதிராக பேசினால் அதை கேட்டுக் கொண்டு காங்கிரசுக்கு ஓட்டுப்போட கர்நாடக மக்கள் என்ன முட்டாள்களா?. இங்கு காங்கிரஸ் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க மக்கள் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறார்கள்“ என்றார்.

மேலும் செய்திகள்