காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பா.ம.க.வினர் ரெயில் மறியல் 120 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் பா.ம.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-11 23:00 GMT
நாமக்கல்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று நாமக்கல் ரெயில் நிலையத்தில் பா.ம.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.ரமேஷ் தலைமை தாங்கினார். காலை 9 மணி அளவில் ரெயில் நிலையத்தில் கருப்புக்கொடியுடன் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கரூரில் இருந்து சேலத்திற்கு சென்ற பயணிகள் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது பா.ம.க. நிர்வாகிகள் சிலர் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று கொண்டும், தொண்டர்கள் தண்டவாளத்தில் அமர்ந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதில் மாநில துணை அமைப்பு தலைவர் சுதாகர், முன்னாள் துணை பொதுச்செயலாளர் செந்தில், மாவட்ட செயலாளர்கள் சதீஷ், பெருமாள், நகர செயலாளர் சரவணன் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை மினிபஸ்களில் ஏற்றிய போலீசார் திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்தனர்.

முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தாலும் நாமக்கல் நகரில் நேற்று வழக்கம்போல் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடின. அனைத்து கடைகளும் திறந்து இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி ராசிபுரம், ஆயில்பட்டி, மங்களபுரம், மல்லசமுத்திரம் பகுதிகளில் மிக குறைந்த அளவில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதற்காக ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கட்சி கொடிகளுடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கு சென்றடைந்தனர். இவர்களுடன் தி.மு.க. நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.பாலு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரெயில் நிலையத்தில் காத்திருந்த பா.ம.க.வினர் திருச்சியில் இருந்து சேலம் சென்ற பயணிகள் ரெயில் மீது ஏறியும், ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்தும் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ஓ.பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல், மேற்கு மாவட்ட செயலாளர் சரவணராஜ், மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு செயலாளர் மோகன்ராஜ், இளைஞர் அணியைச் சேர்ந்த பாலு, ராசிபுரம் நகர பா.ம.க. செயலாளர் மணிகண்டன், வெண்ணந்தூர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். ரெயில் மறியல் போராட்டம் நடத்திய 80 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ராசிபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் போலீசார் காவலில் வைத்தனர். நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்டு கைதான பா.ம.க.வினர் 120 பேரை போலீசார் நேற்று மாலையில் விடுவித்தனர். 

மேலும் செய்திகள்