கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் - கடை அடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-04-11 22:45 GMT
ஓசூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ம.க. சார்பில் ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெற்றது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன் தலைமை தாங்கினார். மாநில சட்ட பாதுகாப்பு குழு துணை செயலாளர் கனல் கதிரவன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் அங்குள்ள தலைமை தபால் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 70 பேரை கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தையொட்டி, ஓசூரில், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, தாலுகா அலுவலக சாலை, ஏரித்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. நகரம் முழுவதிலும் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சூளகிரியிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அஞ்செட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். இதையொட்டி அஞ்செட்டியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கெலமங்கலத்திலும் பா.ம.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதே போல காவேரிப்பட்டணம், மத்தூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, பாகலூர், பேரிகை உள்ளிட்ட பகுதிகளிலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்